NEWS :
TRBNEWS Welcomes You

05 December 2012

தகுதித் தேர்வு, மறுதேர்வு மூலம் 18,382 ஆசிரியர்கள் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,567 பேர் தகுதி பெறவில்லை.
இந்தத் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்தம் 6.60 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் 19 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வு முடிவுகள் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டன. மறுதேர்வில் 19,243 பேர் (புதுச்சேரியையும் சேர்த்து) வெற்றி பெற்றனர். மறுதேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன்பிறகு, தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 1,416 பேரும், இரண்டாம் தாளில் 649 பேரும் பணி நியமனத்துக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டனர். மறுதேர்வில் முதல் தாளில் 9,205 பேரும், இரண்டாம் தாளில் 8,703 பேரும் ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்களாக இருந்தனர். இரண்டுத் தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் 19,343 பேர் ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதியானவர்களாக இருந்தனர்.
இதில் 956 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் என இரண்டுக்கும் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் விருப்பம் தெரிவித்தவாறு ஏதேனும் ஒரு பணிக்கு மட்டும் அவர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 5 பேர் தகுதிச் சான்றிதழ் மட்டுமே போதும் என்று தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து 18,382 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளில் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரம் பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது? முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடுவதில் நீதிமன்ற வழக்குகள் உள்பட சில பிரச்னைகள் உள்ளன. இவை சரிசெய்யப்பட்டதும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு வாரியத்தின் அதிவேகம்: ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதிதான் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிவேகமாகச் செயல்பட்டு நவம்பர் 2-ம் தேதியே தேர்வு முடிவை அறிவித்தது. இப்போது இறுதிப்பட்டியலும் தயாராகி, வெற்றி பெற்றவர்களுக்கு வேலையும் கிடைக்க உள்ளது. வெறும் 18 அலுவலர்கள், ஊழியர்களுடன் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேகம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:

பாடம்  முந்தைய காலியிடங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்  இப்போதைய காலியிடங்கள்
1. தமிழ் 2,298 1,815 483
2. ஆங்கிலம் 4,826 3001 1,825
3. கணிதம் 2,664 1,365 1,299
4. இயற்பியல் 1,454 410 1,044
5. வேதியியல் 1,453 643 810
6. தாவரவியல் 625 62 563
7. விலங்கியல் 622 74 548
8. வரலாறு 4,304 1,182 3,122
9. புவியியல் 1,076 75 1,001
10. சிறுபான்மையின
மொழிப்பாடங்கள் 110 91 19

மொத்தம் 19,432 8,718 10,714

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.