NEWS :
TRBNEWS Welcomes You

15 September 2012

சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி: அக்டோபர் 3-ந்தேதி ஆசிரியர் மறு தகுதித்தேர்வு நடக்குமா?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது என்று சென்னை ஐ கோர்ட்டு கூறியுள்ளதால், அக்டோபர் 3-ந்தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
 
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்தி நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசும், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அதன்பின் நடக்கும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டோ, பதிவு மூப்பு அடிப்படையிலோ நியமனம் பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.
 
இதற்கு ஆசிரிய பட்டதாரிகள் (பி.எட். பட்டம் பெற்றவர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு நியமனமே போட்டித் தேர்வின் மூலம் நடக்கும் போது, மற்றொரு தேர்வு எதற்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதையடுத்து ஆசிரிய பட்டதாரிகள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதினர். இதில் பாடத்திட்ட குளறுபடி, தேர்வு எழுத கொடுக்கப்பட்ட கால அவகாசம் போன்ற காரணங்களால் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில் 1,735 பேர் இடைநிலை ஆசிரியர்கள், 713 பேர் பட்டதாரிகள் ஆவார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 3-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த கூடாது, புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களையும் அனுமதிக்க கோரி சென்னையை சேர்ந்த யாமினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு என்று மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது. எனவே இதுகுறித்த விரிவான பதிலை வரும் 17-ந்தேதிக்குள் அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வை நடத்த முடியாது என்று ஐகோர்ட் கூறியிருப்பதால், புதிதாக தேர்வு எழுதுபவர்களை அனுமதித்து அக்டோபர் 3-ந் தேதிக்குள் தேர்வை நடத்துவதற்கு கால அவகாசம் போதாது. எனவே அக்டோபர் 3-ந்தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.