NEWS :
TRBNEWS Welcomes You

24 January 2013

சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?

சென்னை: கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.
இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில்,  "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.
தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.